அபுஜா
நைஜீரியாவில் இயங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகப்படுவோர் மீது கூட்டு விசாரணை நடத்தி 205 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.
நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் என்னும் தீவிரவாத அமைப்பு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த பயங்கர வாத தாக்குதலில் சுமார் 20000 பேர் மரணம் அடைந்துள்ளனர். லட்சக்கணக்கான பேர் வீடிழந்து அனதைகளாகி உள்ளனர். இந்த இயக்கத்துக்கு தொடர்புடையவர்கள் மற்றும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப் பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட நாட்களாக சிறையில் இருந்த இவர்கள் அனைவர் மீதும் கூட்டு விசாரணையை அந்நாட்டு நீதி மன்றம் நடத்தியது. அந்த விசாரணை முடிவில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 205 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது இரண்டாம் கட்ட தீர்ப்பாகும், சென்ற மாதம் முதல் கட்ட தீர்ப்பில் 45 பேருக்கு தண்டனையும், 468 பேருக்கு விடுதலையும் வழங்கப்பட்டது. இந்த தண்டனைக் கைதிகளுக்கு மூன்றிலிருந்து 60 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து இந்த சிறைதண்டனை வழங்கி உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
நைஜீரிய நாட்டின் மனித உரிமை ஆர்வலர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது விடுதலை செய்யப்பட்டவர்கள் கடந்த 2010லிருந்து சிறையில் தண்டனை இல்லாமலேயே அடைக்கப் பட்டது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என கூறி உள்ளனர். மேலும் அவர்கள் இத்தனை நாட்கள் அவர்கள் மீது வழக்கு விசாரணை நடத்தாதது அவர்களுடைய மனித உரிமைக்கு எதிரானது எனவும்கருஹ்த்டு தெரிவித்துள்ளனர்.