2025 தைப்பூச விழாவுக்கு பால் காவடி எடுத்துச் செல்பவர்கள் முன்பதிவு செய்ய சிங்கப்பூர் இந்து அறநிலைய வாரியம் அறிவித்துள்ளது.
தைப்பூச திருவிழா உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகளைப் போன்று, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் 274 பேர் காவடி எடுத்தும் 12800 பேர் பால் குடம் தூக்கியும் வழிபாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் சுமார் 18000 பேர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று முருகனை வழிபட்டனர்.
இந்த ஆண்டு 2025 பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான வேலைகளை அந்நாட்டு இந்து அறநிலைய வாரியம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அதிகமான மக்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து ஸ்ரீரங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இருந்து பிப்ரவரி 10ம் தேதி இரவு 11:30 மணி முதல் பக்தர்கள் காவடி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் வரை பால் குடம் மற்றும் காவடி எடுத்து பேரணியாக செல்ல பிப்ரவரி 11ம் தேதி இரவு 11 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் டிசம்பர் 27ம் தேதி முதல் பக்தர்கள் இதற்கான முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.