2025 FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்ஜியா-வின் படுமி நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜோங்கியை தோற்கடித்ததன் மூலம் கிராண்ட்மாஸ்டருக்கான தகுதிபெற்றார்.

இந்தியா மற்றும் சீனா இடையே நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜோங்கியை எதிர்த்து திவ்யா தேஷ்முக் விளையாடினார்.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த ஆட்டத்தின் முதல் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் டான் ஜோங்கியை வெற்றிபெற முடியாவிட்டாலும் டிரா செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் திவ்யா செயல்பட்டார்.

இதற்கு முன் மூன்று முறை டான் ஜோங்கியுடன் விளையாடியுள்ள திவ்யா இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார் ஒன்றில் சமன் செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கருப்பு காய்களுடன் விளையாடிய திவ்யா தான் நினைத்தது போல் டிரா செய்தார்.

பின்னர், இரண்டாவது ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் விளையாடிய திவ்யா, டான் ஜோங்கியுடன் விளையாடிய நான்கு ஆட்டங்களின் மூலம் அவரது நகர்வுகளை கணித்த நிலையில் இந்த ஆட்டத்தில் அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறப்பான நகர்த்தல்களை செய்தார்.

இதையடுத்து இரண்டாவது ஆட்டத்தில் வெற்றிபெற்றதை அடுத்து கிராண்ட்மாஸ்டருக்கான தகுதி பெற்றுள்ளார் திவ்யா தேஷ்முக்.

19 வயதான திவ்யா தேஷ்முக் இதன்மூலம் இந்தியாவின் நான்காவது பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற நிலையை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்மட்ட போட்டிகளில் விளையாடும் வீரர்களின் செயல்திறன் அடிப்படையில் கிராண்ட்மாஸ்டருக்கான தகுதி நிர்ணயிக்கப்படும் நிலையில் இவர் அடுத்ததாக விளையாட உள்ள கேண்டிடேட்ஸ் டோர்னமெண்டில் விளையாடுவதைப் பொறுத்து இவருக்கு கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்த்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.