‘கொலை எப்படி உணர்கிறது’ என்பதை அறிய, முன்பின் அறிமுகமில்லாத பெண்ணை இங்கிலாந்தைச் சேர்ந்த 20 வயது குற்றவியல் மாணவர் திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.

குரோய்டனைச் சேர்ந்த நசென் சாடி என்ற குற்றவியல் படித்து வரும் மாணவன், மே 24 அன்று போர்ன்மவுத் கடற்கரையில் 34 வயதான அமி கிரேயைக் கொலை செய்ததாகவும் 38 வயதான லீன் மைல்ஸைக் கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கீழ் ஆஜரான வழக்கறிஞர் சாரா ஜோன்ஸ் கேசி, இந்த தாக்குதலை நடத்த சாடி ஒரு மாதம் திட்டமிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

“கொடிய கத்தி”, “கத்தி” மற்றும் “சிசிடிவி இல்லாத ஹோட்டல்கள்” குறித்து இணையத்தில் தேடியுள்ள சாடி பல்கலைக்கழகத்தில் குற்றவியல் தொடர்பாக நடைபெறும் விரிவுரையின் போது தடயவியல் சான்றுகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த குழப்பமான கேள்விகளை சாடி முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து, ஒரு விரிவுரையாளர், “நீங்கள் ஒரு கொலையைத் திட்டமிடவில்லை, இல்லையா?” என்று கேலி செய்ததாக கூறப்படுகிறது.

தாக்குதல் நடந்த அன்று இரவு, போர்ன்மவுத்தில் ஒரு சுற்றுலா விடுதியில் முன்பதிவு செய்திருந்த சாடி, கொலை சம்பவங்கள் நிறைந்த திகில் திரைப்படமான தி ஸ்ட்ரேஞ்சர்ஸ் – அத்தியாயம் 1 ஐப் பார்த்துள்ளார்.

இது தாக்குதலுக்கு உத்வேகமாக இருந்திருக்கலாம் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அங்கு கடற்கரை மணலில் அமைதியாக தனிமையை ரசித்துக் கொண்டிருந்த அமி மற்றும் லீன் இருவரையும் மணற்பரப்புக்கு அருகில் இருந்த நடைபாதையில் உலாற்றியபடியே நோட்டமிட்டுள்ளான் சாடி.

சிறிது நேரம் கழித்து மணற்பரப்பில் இறங்கி நடந்த சாடி அங்கு அமைதியாக படுத்துக்கொண்டிருந்த அமி மற்றும் லீன் இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினான்.

இதில் அமி அந்த இடத்திலேயே மரணமடைந்த நிலையில் லீன் மட்டும் அவனது தாக்குதலில் இருந்து தப்பி காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார்.

‘கொலை என்ன உணர்வை ஏற்படுத்துகிறது’ என்பதை புரிந்துகொள்ள நடத்தப்பட்ட இந்த இரக்கமற்ற கண்மூடித்தனமான தாக்குதல் தொடர்பாக சாடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருந்தபோதும் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை சாடி மறுத்துள்ளார்.