சேலம்: சாலைபணிகளில் 20% கமிஷன் பெற்றதாக சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர் மீது மவட்ட பாஜக சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் சாலை போடுவது உள்பட அடிப்படை வசதி செய்யும் பணிகளுக்கு 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுங்கட்சியினர் தலையீட்டின் காரணமாக நேற்றே ரகசியமாக ஒப்பந்தம் முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக, சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் பாஜக நிர்வாகிகள், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அவர்களது மனுவில், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய தலைவரான அதிமுகவைச் சேர்ந்த தனலட்சுமி, தனது ஆதரவாளர்களுக்கு வழங்கும் வகையில், ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசி டெண்டரை முடித்து வைத்து, 20 சதவிகிதம் கமிஷன் பெற்றுள்ளார். 20 சதவீத கமிஷன் என்ற பெயரில் தொகையை வாங்கிய தனலட்சுமி, அதை உடனே அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளார். முறைகேடாக நடந்த, இந்த டெண்டரை உடனே ரத்து செய்ய வேண்டும், புதியதாக டெண்டர் விட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக மீது பாஜக கொடுத்துள்ள புகார் மனு சேலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.