சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்த பட்சம் ரூ.8,33 சதவிகிதம் முதல் அதிக பட்சம் 20 சதவிகிதம் வரை போனஸ் வழங்கப்பட உள்ளது.

நாளை மறுதினம் (அக்டோபர் 31ந்தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி,  நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் போனஸ் அறிவித்து தொழிலாளர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசும் ஏற்கனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது.

மேலும்,  ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு தீபாவளி சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கூட்டுறவு சங்கங்கள் சார்பாக தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனை யும் நடைபெறுகிறது.  அதேபோல, சில நாட்களுக்கு முன்னர் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தீபாவளி சிறப்பு போனஸ் அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற சூழலில் தற்போது கரும்பு ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது,  கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு 2023-2024ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023-2024ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி – II ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33 சதவீதம் மற்றும் கருணை தொகையாக 11.67 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33 சதவீதம் மற்றும் கருணை தொகையாக 1.67 சதவீத என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5775 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மேலும், மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க அரசுக்கு ரூ.411.90 லட்சங்கள் செலவினம் ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.