யாழ்ப்பாணம்,
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்துக்கு நீதி கோரி நடந்த போராட்டத்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 20ந்தேதியன்று நள்ளிரவு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் போலீசாரால் படுகொலை செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் குளப்பிட்டி சந்திப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்ப வத்தைக் கண்டித்தும், இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
யாழ் அரசு செயலகம், வடமாகாண ஆளுனர் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு, ஏ9 நெடுஞ்சாலையை மறித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
யாழ் அரச செயலகத்தின் பிரதான நுழைவாயில்களை மாணவர்கள் மறித்து போராட்டம் நடத்தியதால் சுமார் 4 மணி நேரம் அரசு பணிகள் பாதிக்கப்பட்டதாகவும், சாலை மறியல் போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மாணவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண ஆளுனர் ஆகியோரிடம் கொடுத்தனர்.
இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விபத்தொன்றில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், போலீசார் சுட்டுக்கொன்றதாக மாணவர்கள் கூறி வருகிறார்கள்.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புடைந்து உள்ளது.
இன்று இலங்கையின் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
யாழ் மாணவர்கள் படுகொலையை கண்டித்து நாளை லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன் காலை 11 மணி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.