சென்னை

லைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் கடந்த 3 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்றபோது தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது.  பிறகு அவர்,தெலுங்கு மக்கள் குறித்து தவறான கருத்துகளை தெரிவிக்கவில்லை. தவறாக பேசியதாக கருதினால் வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார். ஆயினும் அவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் அளித்த  புகாரின்பேரில் காவல்துறையினர் பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகக் கோரி கஸ்தூரிக்கு சம்மன் வழங்க சென்ற போது முன்னதாகவே அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார்.அவரது  செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோயம்பேடு காவதுறையினரிடமும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டது.   கைதுக்கு பயந்து தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற  கிளை, கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தற்போது தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.