சென்னை: நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக  தலைமை செயலகத்தில் பணியாற்றும்  துறை அதிகாரிகளுக்கு 2 ஷிப்டுகளாக  சுழற்றி முறையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கு  தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளது.

அரசின் அனைத்து துறை தொடர்பு அதிகாரிகள் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக தினமும் சுழற்சி முறையில் நீதிமன்றம் செல்ல வேண்டும், அவர்களின் வருகையினை அரசு வழக்கறிஞர்களிடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுஉள்ளது. இது தலைமைச் செயலக ஊழியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை செயலாளர், அ ரசின் அனைத்து துறை தொடர்பு அலுவலர்களுக்கும் கடந்த ஜுன் 12-ம் தேதி  சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.  அதில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வுகளில் அரசு சார்பான வழக்கு, அதன் மீதான விசாரணை ஆகியவற்றைக் கண்காணிக்க தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறைகளிலும் பிரிவு அலுவலர், அரசு சார்புச் செயலாளர் நிலையில், நியமிக்கப்பட்ட தொடர்பு அலுவலர்களுக்கான பணிகள், கடமைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசின் பொதுத் துறை உத்தரவுபடி, ஒவ்வொரு துறையும் தொடர்பு அலுவலர்களை நாளொன்றுக்கு இருசுழற்சி முறைகளில் முதல் சுழற்சியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் இரண்டாவது சுழற்சியில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பணியாற்றும் வகையில் நியமிக்க வேண்டும்.

தலைமைச் செயலகத் துறைகளால் நியமனம் செய்யப்படும் தொடர்பு அலுவலர்கள் தங்களது வருகையினை அரசு வழக்கறிஞர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும்,  அவர்களது வருகைப் பதிவானது அரசு வழக்கறிஞர் அலுவலகங்களில் பராமரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும்,  நீதிமன்ற வழக்குகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்படும் தொடர்பு அலுவலர்களுக்கு 12 கட்டளைகளை (பணிகள், கடமைகள் தொடர்பாக) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,    தமிழ்நாடு அரசின் பொதுத்துறை செயலாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்ற வேண்டும் என்பதை ஏற்க முடியாது என தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன் கூறுகையில், நீதிமன்ற வழக்குகளை அரசு துறைகளின் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அலுவலகத்தில் தினசரி பணிகளை முடிக்க வேண்டிய அதிகாரிகள் நீதிமன்றத்தில் தங்கள் நாள் முழுவதையும் கழிப்பதை ஏற்க முடியாது.

அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் தொடர்பு அதிகாரிகளின் வருகைப்பதிவு வைத்திருக்கப்படும் எனக் கூறுவது இது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர வேறில்லை என்று விமர்சித்தார். தொடர்ந்து அரசின் குறிப்பிட்டுள்ள நேரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இருப்பார்கள், அதனால் இங்கு நேரமும் பொருந்தவில்லை என்றார்.

தொடர்ந்து, இரண்டு ஷிப்ட்களில் அதிகாரிகளை நியமிப்பது, அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய முடிவு, அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் எடுக்கப்பட்ட முடிவாகப் பார்க்கிறோம். இது அரசாங்கத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையிலான உறவை பாதிக்கும் என்று அவர் கூறினார்.