மும்பை: மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 2 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

மும்பை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தாராவி ஆசியாவின் மிகப்பெரிய சேரி. 5 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.

தாராவியில் 56 வயது நபர் புதன்கிழமை உயிரிழந்தார். உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட சில மணிநேரங்களில் அவர் இறந்தார்.

உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் பரிசோதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 300 வீடுகள் மற்றும் 90 கடைகள் நிரம்பிய அவர் வாழ்ந்த பகுதி தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் வகையில் சீல் வைக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை, தாராவியில் உள்ள நகரத்தின் பிரஹன் மும்பை மாநகராட்சியில் பணிபுரியும் 52 வயதான துப்புரவாளருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இந் நிலையில், தாராவியை சோ்ந்த 35 வயது டாக்டருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டாக்டருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதன் மூலம் தாராவியில் 3வது நபரை கொரோனா தாக்கி உள்ளது. இது தாராவி மக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள தாராவியில் கொரோனா பரவலை மாநகராட்சி எப்படி தடுக்க போகிறது என்ற கேள்வியும் மக்கள் இடையே எழுந்து உள்ளது.