சென்னை: பெருங்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கழிவுநீர் தொட்டி, சாக்கடைகளை இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், தொழிலாளர்களை வைத்துதான் சுத்தம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இருவர் சென்னை மாதவரத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 2 பேர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில், இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்களையும் விஷவாயு தாக்கியுள்ளது . இதையறிந்து அப்பகுதியினர் விரைந்து கழிவு நீர் தொட்டியில் சிக்கி இருந்த இரண்டு தொழிலாளர்களையும் மீட்டனர்.
இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவரும் உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி போலீசார் இரண்டு சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.