அல்ஜியர்ஸ்
ஊழல் வழக்கில் சிக்கிய இரு முன்னாள் பிரதமர்களுக்கு அல்ஜீரிய நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.
அல்ஜீரிய நாட்டின் இரு முன்னாள் பிரதமர்களான அகமது ஔயாகியா மற்றும் அப்தல்மலிக் செல்லல் ஆகியோர் மீது ஊழல் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு வாகன உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து இருவரும் சில சலுகைகளுக்காக லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதையொட்டி மக்களின் போராட்டங்களுக்கிடையே வழக்குப் பதியப்பட்டு அல்ஜீரிய நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த இரு பிரதமர்களும் நீண்டகாலம் ஜனாதிபதியாக இருந்த அப்தலசீஸ் பவுலஃபிகாவின் கீழ் பதவி வகித்து வந்தனர். இந்த வருட ஆரம்பத்தில் நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி அவரை பதவியில் இருந்து விரட்டி அடித்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பைக் காண ஏராளமான மக்கள் காத்திருந்ததால் வழக்கத்துக்கு மாறாக நேரடி ஒளிபரப்பு நடந்தது. நீதிமன்றம், ஔயாகியாவுக்கு 15 வருடச் சிறைத் தண்டனை மற்றும் 16000 டாலர் அபராதமும், செல்லல் க்கு 12 வருடச் சிறைத் தண்டனை மற்றும் 8000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பினால் போராட்டக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீதிமன்றத்துக்கு வெளியில் கூடி இருந்த மக்கள் அல்ஜீரிய நாட்டு தேசியக் கொடியை ஆட்டி மகிழ்வைத் தெரிவித்தனர். மேலும் இரு பிரதமர்களையும் கொள்ளை கும்பல் என கோஷம் இட்டனர்.