பைக் டாக்சிகள் அதிகரித்துள்ளதை கண்டித்தும் செயலி மூலம் இயக்கப்படும் ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு ஆப் நிறுவனங்கள் அதிக கமிஷன் வசூலிப்பதை கண்டித்தும் டெல்லியில் இன்றும் நாளையும் ஆட்டோ – டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி ஆட்டோ டாக்ஸி டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் யூனியன் (DATTCU), டாக்ஸி சாலக் சேனா யூனியன் மற்றும் டெல்லி ஆட்டோ டிரைசைக்கிள் டிரைவர் யூனியன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஆட்டோ – டாக்சி ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளன.
இதனால் டெல்லியில் 80 சதவீதத்துக்கும் மேலான ஆட்டோ மற்றும் டாக்சிகளில் இன்று ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் பேரணி நடத்திய ஓட்டுனர்கள் செயலி மூலம் இயக்கப்படும் ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு ஆப் நிறுவனங்கள் அதிக கமிஷன் வசூலிப்பதால் ஓட்டுனர்களுக்கு சொற்ப பணமே மிஞ்சுகிறது என்று கூறினர்.
மேலும், தனியார் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட நம்பர் பிளேட்டுகளை வைத்துக் கொண்டு வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பைக் டாக்சிகள் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஆட்டோ – டாக்சி ஓட்டுனர்களுக்கு கிடைக்கும் சொற்ப பணமும் கேள்விக்குறியாகி உள்ளது என்று கொந்தளித்தனர்.
டெல்லி ஆட்டோ – டாக்சி ஓட்டுனர்களின் வேலை நிறுத்தம் நாளையும் தொடரும் என்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அலுவலகத்துக்கு செல்வோர் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.