ஷாம்பு விளம்பரத்தில் மாடலாக நடித்தவரின் கூந்தலை தன் இஷ்டம் போல் வெட்டிய பிரபல நட்சத்திர ஓட்டலின் சிகையலங்கார நிலையத்திற்கு கன்ஸ்யூமர் நீதிமன்றம் 2 கோடி ரூபாய் இழப்பீடு விதித்து சமீபத்தில் தீர்ப்பளித்தது.

முடியை வெட்டியதற்கு இவ்வளவு அதிகமாக அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம் வெளிநாட்டு பத்திரிகைகளிலும் பரவலாகப் பேசப்பட்டது,

இதுகுறித்து, ‘வாய்ஸ் ஆப் இந்தியா’ நுகர்வோர் விழிப்புணர்வு ஆர்வலர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் இதற்கு முன் தவறான சிகிச்சைக்காக உயிரிழந்த ஒரு வெளிநாடு வாழ் இந்தியருக்கு மிக அதிகமாக இந்திய மதிப்பில் ரூ. 11 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

அது உயிரிழப்பு தொடர்பான விவகாரம் என்பதும், இழப்பீட்டுத் தொகை அமெரிக்க டாலர்களில் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது, இருந்தபோதும் முடியை வெட்டியதற்காக இவ்வளவு பெரிய தொகை இழப்பீடாக அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தனர்.

மேலும், நுகர்வோர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதால், இழப்பீடு குறித்த இறுதி நிலைப்பாடு அதன் பின் தான் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

படம் நன்றி வாய்ஸ் ஆப் இந்தியா

பேன்டீன் உள்ளிட்ட விளம்பரங்களில் நடித்த அனுபவத்துடன் பிரபல நிறுவனம் நடத்திய நேர்காணலுக்கு செல்ல வேண்டி ஏப்ரல் 2018 ல் டெல்லியில் உள்ள ஐடிசி-க்கு சொந்தமான ஐடிசி மவுரியா ஐந்து நட்சத்திர ஓட்டலில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்ற ஆஷ்னா ராயின் கூந்தலை அவர் கூறியது போல் அல்லாமல் வேறுமாதிரியாக வெட்டி விட்டதாகவும்.

இதனால் தனக்கான விளம்பர மாடல் வாய்ப்பு கை நழுவிப்போனதாகவும் அதனால் தனது எதிர்கால திட்டங்களும் கனவுகளும் தகர்க்கப்பட்டதாக கூறி நஷ்டஈடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், கூந்தலை கீழிருந்து நாலு அங்குலம் வெட்ட சொன்ன நிலையில் அந்த சிகையலங்கார நிபுணர் மேலிருந்து நாலு அங்குலம் மட்டும் விட்டுவிட்டு மிச்சத்தை வெட்டி எடுத்துவிட்டார்.

முடிதிருத்தும் போது மூக்குக் கண்ணாடி இடைஞ்சலாக இருக்கும் என்று கழட்டச் சொன்னதால் தன்னால் தெளிவாக பார்க்க முடியவில்லை என்று கூறிய அவர் இதுகுறித்து மேலாளரிடம் புகாரளித்தபோது ஏறெடுத்தும் பார்க்கவில்லை பின்னர் ஐடிசி குழும மேலான் இயக்குநரை தொடர்பு கொண்டதற்கு கூந்தலை நீட்டிக்க சிகிச்சையளிக்க உறுதியளித்தார்.

சிகிச்சைக்குப்பின் கேசம் வளர்வதற்கு பதில் அந்த ரசாயன கலவையால் என் தலையில் தோல் சம்பந்தமான நோய் ஏற்பட்டதுதான் மிச்சம் என்று கூறிய ஆஷ்னா ராய் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெண்களுக்கு இயற்கையிலேயியே கூந்தல் மீது அதீத பிரியமும் கவனமும் இருப்பதால் கவனக்குறைவாக செயல்பட்ட ஐடிசி மவுரியா ஓட்டல் சிகையலங்கார பிரிவு இவருக்கு ரூ 2 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது.

மேலும், இழப்பீடு வழங்குவது மட்டுமே நோக்கமாக இல்லாமல் சேவை வழங்கும் நிறுவனங்களின் அணுகுமுறையில் தரமான மாற்றத்தைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி டாக்டர் எஸ்.எம். காந்திகர் அப்போது தனது தீர்ப்பில் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.