பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையம் அருகே நேற்றிரவு நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 2 சீனர்கள் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போர்ட் காசிம் மின்சார நிறுவனத்தைச் சேர்ந்த சீன ஊழியர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் 4 கார்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இயங்கி வரும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் அரசு தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
அதேவேளையில், பாகிஸ்தானில் உள்ள சீனர்கள் பணியிடங்களில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.