டெல்லி: லாக்டவுனின் போது கல்வி கட்டணம் வசூலித்ததாக தலைநகர் டெல்லியில் உள்ள பிரபல பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 பரவல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எப்போது அவை தொடங்கும் என்று அறிவிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. அதே நேரத்தில் கல்விக் கட்டணங்களை வசூல் செய்யக்கூடாது என்று அரசும் உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில் டெல்லியில் பிரபலமான தனியார் பள்ளி, கட்டணங்களை வசூலித்ததால் அதன் இரு கிளைகளுக்கும் பூட்டி சீல் வைத்து இருக்கிறது முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு. ஷேக் சாராய், சாகேத் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் இந்த கல்வி நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்ட புகார்களை பள்ளி நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.
ஆனால், அரசின் உத்தரவை மீறி சட்டத்துக்கு விரோதமாக கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை விதிகளின் படி தான் இயங்கி வருகின்றோம். எங்கள் மாணவர்களின் நலன்கள் மிக முக்கியமானவை.
கட்டணம் குறித்து, எங்கள் பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளும் கல்வி இயக்குநரகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களுடன் ஒத்துப்போகின்றன. கட்டணத்தை வசூலிக்க தேவையான அனைத்து ஒப்புதல்களும் எங்களிடம் உள்ளன. கட்டணத்தை செலுத்த நாங்கள் நிச்சயமாக பெற்றோரை கட்டாயப்படுத்தவோ, துன்புறுத்தவோ இல்லை.
உண்மையில், உதவித்தொகையுடன், தேவைப்படுபவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என்றார். சாகேத் பள்ளி கிளையின் முதல்வர் கூறுகையில், கிட்டத்தட்ட எல்லா பெற்றோர்களும் எங்களுடன் இருக்கிறார்கள், நிலைமையை புரிந்துகொள்கிறார்கள். ஒரு சில பெற்றோர்கள் மட்டுமே புகார் அளித்து வருகின்றனர் என்றார்.