சென்னை
சென்னை டிஜிபி அலுவலகத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த இரு ஆயுதப்படை காவலர்கள் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர்.
சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு தேனி மாவட்டத்தில் இருந்து இரு ஆயுதப் படை காவலர்கள் வந்துள்ளனர். ரகு மற்றும் கணேஷ் என்னும் பெயருடைய இருவரும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளிக்க வந்துள்ளனர். தேனி மாவட்ட ஆயுதப் படையில் பணி புரியும் இருவரும் இன்று தங்கள் புகார் மனுவை கொடுத்து விட்டு வெளியே வந்தனர்.
வெளியே வந்ததும் திடிரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதைக் கண்ட டிஜிபி அலுவலகக் காவல் பணியில் இருந்த காவலர்களும் மயிலை சரக போக்குவரத்து காவலர்களும் அவர்கலை தடுத்து மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் அவர்கள் இருவரும் தேனி மாவட்ட ஆயுதப் படையில் இருந்து தற்போது காரணம் இல்லாமல் ராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் இருவரும் தங்கள் உயர் அதிகாரிகள் ஜாதி ரீதியான கண்ணோட்டத்துடன் இவ்வாறு இட மாற்றம் செய்ததாகவும் மன உளைச்சல் தாளாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். விசாரணை இன்னும் தொடர்கிறது.