என் டி ஆர் மாவட்டம்
ஆந்திராவில் வாட்ஸ்அப் மூலம் பச்சிளம் பெண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்க முயன்ற இரு பெண் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் உள்ள என் டி ஆர் மாவட்டத்தில் ஜி கோந்துரு மண்டலத்தில் மருத்துவர் புஷ்பலதா பதிவு செய்யப்பட்ட மருத்துவராகப் பணி செய்து வருகிறார். அவர் தனது வாட்ஸ்அப் குழுவில் பிறந்து 3 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனைக்கு உள்ளதாகப் புகைப்படம் மற்றும் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். மருத்துவர் புஷ்பலதாவின் பக்கத்து வீட்டுக்காரரான துர்கா என்பவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன. அவர் மீண்டும் கர்ப்பம் ஆன போது அவர் கணவர் மூன்றாவதும் பெண்ணாகப் பிறந்தால் தள்ளி வைத்து விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதை அவர் மருத்துவர் புஷ்பலதாவிடம் தெரிவித்துள்ளார். துர்காவுக்கு மூன்றாம் குழந்தையும் பெண்ணாக பிறந்துள்ளது. இதையொட்டி மருத்துவர் புஷ்பலதா தனது மற்றொரு மருத்துவர் தோழி அம்ருதா என்பவருடன் இணைந்து அந்தக் குழந்தையை விற்பனை செய்ய முயன்றுள்ளனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது.