புதுடெல்லி: இந்தியாவில் ஒரேநாளில், சுமார் 2 கோடியே 19 லட்சம் மின்னணு பரிவர்த்தனைகள் மத்திய அரசின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 30ம் தேதிதான் அந்த நாள்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில், மார்ச் 24 முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் மாதத்துடன் நிதியாண்டு நிறைவடைவதால், அம்மாதத்தின் கடைசி வாரத்திலும், ஏப்ரலில் முதலிரண்டு வாரங்களிலும் மத்திய அரசு அதிகாரிகளால் பல்வேறு நலத்திட்டங்களுக்கும், பயனாளிகளுக்கும் மின்னணு பரிவர்த்தனை மூலம் நிதி அனுப்பப்படும்.
அந்த வகையில், மார்ச் 30ம் தேதி ஒரே நாளில் 2 கோடியே 19 லட்சம் மின்னணு பரிவர்த்தனைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரேநாளில் அதிகமான பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. இந்தப் பரிவர்த்தனைகளில், 1 கோடியே 97 லட்சம் பரிவர்த்தனைகள் பிரதமரின் கிஷான் திட்ட பயனாளிகளான விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 நிதி அளிக்க மேற்கொள்ளப்பட்டவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு, இதே காலக்கட்டத்தில் 3.44 கோடி பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.