இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 3 விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி முதல் டி20 போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. போட்டி தொடங்கும் முன்பு புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதனால் இந்திய அணி சார்பில் பேட்டிங் செய்ய முதலில் ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். ரோஹித் சர்மா 5 ரன்களிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி 24 ரன்களிலும், ரிஷப் பண்ட் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய எம்.எஸ். தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 ரன்கள் சேர்த்தார். அதேபோன்று ராகுல் பொறுப்ப்புடன் செயல்பட்டு அரைசதம் எடுத்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் கவுல்டர் நைல் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணி 5 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. அடுத்த வந்த மேக்ஸ்வெல் தொடக்க வீரர் ஆர்கி ஷாட்டுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சேர்ந்து 84 ரன்கள் குவித்தனர். ஆர்கி ஷார் 37 ரன்களில் வெளியேற மேக்ஸ்வெல் அரைசதம் கடந்தார்.
15 ஓவர்களுக்கு மேப் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து திணறிய போது ஆட்டம் பரப்பரப்பான கட்டத்தை எட்டியது. இறுதி ஓவரில் ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த போது, குல்தீப் யாதவ் வீசிய பந்துக்களை அந்த அணியின் வீரர்கள் பயன்படுத்தி கொண்டு பவுண்ட்ரி மற்றும் ரன்களை அள்ளினர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 127 ரன்கள் எடுத்து 3விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன் மூலம் டி20 தொடரில் 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.