சென்னை:

1971ம் பெரியார் ஊர்வலத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து  துக்ளக்கில் மீண்டும் பிரசுரிக்கப்படும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி டிவிட் போட்டுள்ளார்.

துக்ளக் 50வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய இந்து எதிர்ப்பு ஊர்வலத்தில் இந்துக்கள் வணக்கும் சாமிப்படங்களை செருப்பால் அடித்து, அவமானப்பபடுத்தினார் என்று கூறினார். இது தொடர்பான செய்தி வெளியிட்டதற்காக துக்ளக் இதழ் விற்பனை அப்போதைய திமுக ஆட்சியால் முடக்கப்பட்டதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திராவிட கட்சிகள், ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரஜினிக்கு மிரட்டல் விடுத்தன. அவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று பெரியாரிய இயக்கங்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால், செய்திகளைக் கொண்டுதான், நான் பேசினேன் என அதற்கு ஆதாரமாக சில பத்திரிகைகளை காட்டியவர், இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், 1971 ஆம் ஆண்டு சேலம் நகரில் பெரியார் ஊர்வலத்தின்போது  என்ன நடந்தது என்பது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில்,  1971 ஆம் ஆண்டு சேலம் நகரில், பெரியார் நடத்திய ஊர்வலம் தொடர்பான செய்தியை வரும் இதழில் மறுபிரசுரம் செய்ய உள்ளோம் என்று, அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது  டிவிட்டர் பக்கத்தில், பல துக்ளக் வாசகர்கள் திகவின் 1971 சேலம் ஹிந்து கடவுள் அவமதிப்பு ஊர்வலம் பற்றி வந்த துக்ளக் இதழை மறுபடி வெளியிடும் படி கேட்டிருக்கிறார்கள். அந்த முழு இதழும் அவசியமில்லை. அதில் வந்த சேலம் பற்றிய விவரங்களை மட்டும் வருகிற இதழில் கொடுக்க நினைக்கிறோம் என்று பதிவிட்டு உள்ளார்.