டெல்லி: 18வது நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்ற நிலையில், இன்று நடைபெறும் முதல் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரையாற்றுகிறார்.
18வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரலில் தொடங்கி ஜுன் 1ந்தேதியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியானது. மக்களவைக்கு மொத்தம் உள்ள 543 இடங்களில் பா.ஜனதா தனித்து 240 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியானது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி 99 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களை எந்தவொரு கட்சியும் தனித்து பெறாத நிலையில், அதிக தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, தனது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 3வது முறையாக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, 293 எம்.பி.க்களின் ஆதரவுடன் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி ஆட்சி அமைத்தது. பிரதமராக மோடி 3வது முறையாக ஜூன் 9ந்தேதி பதவி ஏற்றார். அவரது தலைமையில் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. பிரதமராக மோடி, 30 ஒன்றிய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, 18வது மக்களவையின் தொடக்க அமர்வு திங்கள்கிழமை (ஜூன் 24) தொடங்கியது, அதே நேரத்தில் ராஜ்யசபாவின் 264வது அமர்வு ஜூன் 27 அன்று தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
ஏற்கனவே கடந்த இரு நாட்களாக வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் இன்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஜூன் 27) காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். இந்த உரையில் நரேந்திர மோடி அரசு தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் அமல்படுத்த திட்டமிட்டிருக்கும் திட்டங்களை கோடிட்டு காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.