சென்னை:  தமிழ்நாட்டில்,  அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.7500 கோடியில் புதிதாக 18000 வகுப்பறைகள் கட்டப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த  கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு மாநில நிதியை ஒதுக்கீடு செய்ததற்கு, இருமொழி கொள்கையில் உறுதியாக இருப்பதற்கு என முதல்வரின் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய  அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழக அரசுப் பள்ளிகளில் 1.30 லட்சம் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற காரணமாக இருந்த ஆசிரியர்கள், அரசு அதிகாரிகளின் நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன், பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7500 கோடி மதிப்பீட்டில் அரசுப் பள்ளிகளில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன.
புதிய வகுப்பறைகள்

வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் மாவட்டவாரியாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், பள்ளிக்கல்வி துறையின் கட்டுமானப் பணிகள் மற்றும் திட்டங்களை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நேரடியாகப் பார்வையிட வேண்டும். திட்டங்களை நிறவேற்றுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக துறை அமைச்சருக்கோ அல்லது பெற்றோர் ஆசிரியர் கழக தலைமைக்கோ தெரியபடுத்த வேண்டும் என்றார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்

தொடர்ந்து பேசுகையில், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே அரசுப் பள்ளிகளின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த முடியும். 234 தொகுதிகளில் உள்ள பள்ளிகளையும் நான் மட்டும் ஆய்வு செய்தால் போதுமானதாக இருக்காது. மாவட்டவாரியாக உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், நிர்வாகிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.