குஜராத் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
குஜராத்தின் பனஸ்கந்தாவில் ஏற்பட்ட இந்த அசம்பாவித சம்பவத்தை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பனஸ்கந்தா கலெக்டர் மிஹிர் படேல் கூறுகையில், “காலை 9.45 மணியளவில் தொழிற்சாலையில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது, இதனால் தொழிற்சாலையின் கான்கிரீட் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது.”
இதில், தொழிற்சாலையில் இருந்து 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன, இடிபாடுகளுக்கு அடியில் பலரின் உடல் சிக்கியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தவிர, பலத்த காயங்களுடன் நான்கு பேர் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் மூன்று பேர் மட்டுமே இறந்ததாக அறிவிக்கப்பட்டது, பின்னர் மீட்பு நடவடிக்கை தொடர்ந்தபோது அது ஏழு பேர் மற்றும் பின்னர் பதின்மூன்று பேர் என அதிகரித்தது.
இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தீசா நகராட்சியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருப்பதாக அவர் கூறினார்.
தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, இறுதியாக தீ அணைக்கப்பட்டது, இருப்பினும், மீட்பு நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழு சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளுக்கு உதவி வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.