புதுடெல்லி:
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், இழப்பீட்டை குறைத்து மதிப்பிடுவதாக கூறியும், அடிப்படை விதிகளை மீறியதாகக் கூறியும், 18 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் தமிழக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேச விவசாயிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. 1995-ம் ஆண்டிலிருந்து விவசாயிகள் தற்கொலை உயர்ந்து கொண்டே போவதால், அவர்களது இழப்பீட்டை ஈடுசெய்யும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் சோயா பீன்ஸ் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரத்து 543 ரூபாய் இழப்பீடாக தரவேண்டும். ஆனால், ரூ 1,700 மட்டுமே இழப்பீடாக தரப்பட்டது. இது அறிவிக்கப்பட்ட தொகையிலிருந்து 62.5 சதவீதம் குறைவாகும்.
இந்தத் திட்டத்தை இந்திய விவசாய இன்சூரன்ஸ் கம்பெனி உட்பட நாட்டிலுள்ள 18 பொது மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன.
18 இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் விவசாயிகளின் இழப்பீட்டை அரசு அறிவித்தது போல் தருவதில்லை. குறைத்து மதிப்பிட்டு இழப்பீட்டை வழங்கி வருகின்றன.
மேலும் இந்த திட்டத்தால் இன்சூரன்ஸ் நிறுவனங்களே பயனடைகின்றன இதனால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை என்று கூறி, தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.