டெல்லி: நாளை 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியதாக வெளியான தகவலின்படி, ரூ.2000க்கும் மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால், அதற்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க ஒப்புதல் வழங்கப்படுமா என்பது தெரிய வரும்.
ரூ.2000க்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18சதவீத ஜிஎஸ்டி விதிக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முடிவு செய்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 54வது கூட்டம் நாளை (செப்டம்பர் 9) நடைபெற உள்ளது. இதில், வாடிக்கையாளர்களிடமிருந்து ஆன்லைன் கட்டணங்களை ஏற்றுக்கொள்ள வணிகங்களை செயல்படுத்தும் பேமெண்ட் திரட்டிகள், மத்திய மற்றும் மாநில வருவாய் அதிகாரிகளை உள்ளடக்கிய ஜிஎஸ்டி பொருத்துதல் குழு விரைவில் இந்த புதிய வரியை எதிர்கொள்ளக்கூடும் என தவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, 2016ஆம் ஆண்டு ரூ.2,000க்கு கீழ் உள்ள பரிவர்த்தனைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதுபோல, , க்யூஆர் குறியீடுகள், பிஓஎஸ் மெஷின்கள் மற்றும் நெட் பேங்கிங் போன்ற பல்வேறு டிஜிட்டல் பேமெண்ட்டுகளைக் கையாள்வதால், ரூ.2,000க்குக் குறைவான பரிவர்த்தனைகளுக்கு, பேமெண்ட் திரட்டிகள் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
ஆனால், பல வணிக நிறுவனங்கள், சற்று பெரிய அளவிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு 0.5% முதல் 2% வரை கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதன் காரணமாக ரூ.2000க்கு மேல் நடைபெறும் அனைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கும் ஜிஎஸ்டி விதிப்பது குறித்து நாளை நடைபெற உள்ள கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்தால், தினசரி குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் பெரும்பகுதியைக் கையாளும் சிறு வணிகங்கள் எதிர்மறையாக பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமீப காலமாக இந்தியாவில் அனைத்து வகையான சிறு முதல் பெரும் பண பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மூலமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்ததால் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, போன் பே, ஜி பே மூலம் செய்யும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதை தனது அரசின் பெருமை மிகு திட்டமாக பிரதமர் மோடியும் சிலாகித்து வருகிறார்.
இந்த நிலையில், திடீரென ரூ.2000க்கும் ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்துள்ளது பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கைவிட்டு மீண்டும் பணம் (Cash) பரிவர்த்தனைக்கு செல்லும் நிலை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், அது மத்திய பாஜக அரசுக்கு பேரிடியாகவும், வரும் தேர்தல்களில் பொதுமக்கள் பாஜகவுக்கு சம்மட்டி கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.