சென்னை: சென்னையில் புரோட்டீன் பவுடர் என்ற பெயரில் தாய்ப்பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தாய்க்கால் விற்பனையை கண்காணிக்க 18 குழுக்களை அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாதவரத்தில், சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்த முத்தையா என்பவரது கடையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், 50க்கும் மேற்பட்ட பாட்டில்களில் தாய்ப்பால் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்ய உரிமம் பெற்று, சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டு வருவது சோதனையில் அம்பலமாகியுள்ளது. விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதியில்லை என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தாய்ப்பால் மீதான விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில் தேவையை ஈடுகட்டும் கட்டமைப்பை எப்படி உருவாக்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது.