மியன்மார் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) ரிக்டரில் 7.7 அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் அந்நாட்டில் இதுவரை 1700 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், 300 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மியான்மரை ஆளும் ராணுவக் குழு ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று இன்று (மார்ச் 31) அறிவித்துள்ளது.
ஏப்ரல் 6 வரை தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவித்துள்ள ஆட்சியாளர்கள், நிலநடுக்க ஏற்பட்டு மூன்று நாட்களுக்கும் மேலாவதை அடுத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்கும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
மியான்மரின் மண்டாலே பகுதியில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதால் நோயாளிகள் தற்காலிக கூடாரங்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
தவிர, நாட்டின் பல பகுதிகளில் தகவல் தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இந்த நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.