டில்லி:
மத்திய அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று நாட்டின் 16வது மக்களவையை கலைத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து 17வது மக்களவையை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
17வது மக்களவைக்கான தேர்தலில் 303 இடங்களை கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி தலைவர்கள் கூட்டத்தில், மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதையடுத்து? மோடி தலைமையிலான ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர உள்ளது.
இதற்கிடையில், நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது 16-வது மக்களவையை கலைக்க பரிந்துரை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்த தீர்மானத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சென்று சந்தித்து பிரதமர் மோடி கொடுத்தார். அதனுடன் அமைச்சர்களின் ராஜினாமா உள்பட தனது ராஜினாமா கடிதங்களையும் சமர்ப்பித்தார்.
ஆனால், புதிய அரசு உருவாகும் வரை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் தங்கள் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரவை பரிந்துரையை ஏற்று , 16-வது மக்களவையை கலைத்து ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஆணை பிறப்பித்துள்ளார்.