பாட்னா: நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலால், மொத்தம் 160 டன்கள் பயோமெடிக்கல் கழிவுகள் சேர்ந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட சானிடைசர் பாட்டில்கள் ஆகிய வகைப்பாடுகளில் இந்த பயோமெடிக்கல் கழிவுகள் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா பரவலின் மத்தியில் நடைபெற்ற இத்தேர்தலை பாதுகாப்புடன் நடத்துவதற்காக, 18 லட்சம் முக கேடயங்கள், 70 லட்சம் முகக் கவசங்கள், 5.4 லட்சம் ஒருமுறை பயன்பாட்டு ரப்பர் கையுறைகள் மற்றும் 7.21 கோடி ‘ஒரு கை’ ஒருமுறை பயன்பாட்டு பாலித்தீன் கையுறைகள் ஆகியவற்றை தருவித்தது தேர்தல் ஆணையம்.
மேலும், 100 மில்லி மற்றும் 500 மில்லி அளவுகளில், 29 லட்சம் சானிடைசர் பாட்டில்களும் வரவழைக்கப்பட்டன. மேலும், தேர்தலுக்கு முந்தைய நாள், தேர்தல் நடைபெறும் அறைகள் சுத்தம் செய்யப்பட்டதோடு, தேர்தல் நாளன்று மூன்று முறை சுத்தம் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு பொருட்களை முறையாக அப்புறப்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் பயோமெடிக்கல் கழிவு அகற்றும் ஏஜென்சிளும் அமைக்கப்பட்டிருந்தன என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தோராயமாக, 160 டன் பயோமெடிக்கல் கழிவுகள் சேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.