கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் தற்போது பெண்ணுக்கெதிரான இன்னொரு கொடூர வன்முறையொன்று நிகழ்ந்து, சட்ட ரீதியாக நீதி கிடைக்காத விரக்தியின் விளைவாக தூக்கிலிட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ள செய்தி அதிர்சிக்கு மேல் பேரதிர்ச்சியாக பதிவாகியுள்ளது.
கான்பூரின் ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமியை மூன்று பேர் கடத்திச் சென்று மூன்று நாட்கள் கூட்டு பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியுள்ளனர். இது சம்பந்தமாக அந்த பெண் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரை வெறும் கடத்தலாக பதிவு செய்தனர்.
அதன் பின்பு அந்த சிறுமியும் அவரைச் சார்ந்தவர்களும் கொடுத்த அழுத்தம் காரணமாக முதல் தகவல் அறிக்கையில் வன்புணர்வு குற்றத்தையும் சேர்த்து பதிவு செய்துள்ளது காவல்துறை. எனினும், குற்றவாளிகளைப் பிடித்து சரியான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளவிலை.
குற்றவாளிகளை உத்தரப் பிரதேச காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்துத் தண்டிக்கத் தவறியதால் மிகவும் மனவிரக்திக்குள்ளான அந்த 16 வயது சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இது போன்ற கொடூரங்கள் நிகழ்ந்து வருவது குறித்து சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை செய்திகளிலும் அதிர்வலைகள் பிரதிபலிப்பது மக்களின் அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.