அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
இதில் சுயேட்சையாக களமிறங்கிய ஜிதேந்திர சவுகான் என்பவர் அமித் ஷா-வின் ஆட்கள் தன்னை கடத்தி மிரட்டியதை அடுத்து தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுள்ளதாக ‘ஸ்க்ரோல்’ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
ஜிதேந்திர சவுகான் உட்பட 3 வேட்பாளர்கள் மிரட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ள ‘ஸ்க்ரோல்’ இதழ் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் இதுவரை 16 பேர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாகவும் அதில் சுயேட்ச்சைகள் தவிர நான்கு பேர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
ஜிதேந்திர சவுகான் தவிர ஒருசிலர் மட்டுமே தாங்கள் பாஜக மற்றும் போலீசாரால் மிரட்டப்பட்டதாக கூறியுள்ள நிலையில் பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவு செய்ய தங்களிடம் பணமில்லை என்று கூறியுள்ளனர்.
போட்டியில் இருந்து விலக தனக்கு பணம் வழங்குவதாக காவல்துறை உதவியுடன் பாஜக-வினர் தன்னை மிரட்டியபோதும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பணம் எதுவும் வாங்காமல் போட்டியில் இருந்து விலகியதாக ஜிதேந்திர சவுகான் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சூரத் தொகுதியில் வேட்பாளர்கள் அனைவரும் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து அந்த தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 1989 முதல் பாஜக-வின் கோட்டையாக உள்ள காந்தி நகர் தொகுதியில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 5.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா வெற்றிபெற்ற போதும் மே 7 ம் தேதி நடைபெற்ற இருக்கும் தேர்தலில் இருந்து 16 பேர் விலகியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.