திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைக்கான  இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பிரியங்கா காந்தி உள்பட 16 பேர் போட்டியிடுகின்றனர்.

ராகுல்காந்தி ராஜினாமாவைத் தொடர்ந்து, வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி,   கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில்  நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் 23ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இ தைத்தொடர்ந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே பிரியங்கா உள்பட 21 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்த நிலையில், இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி,  காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா, பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், ஆளும்கட்சியான கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சத்யன் மோக்கேரி உள்பட 16 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.

வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து பிறகு கடந்த 28ம் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரியங்கா காந்தி உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில் வேட்பு மனுக்கள் வாபஸ் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. அன்றைய தினம் வரை யாரும் மனுவை வாபஸ் பெறவில்லை. இதையடுத்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால், அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

முன்னதாக தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிரியங்கா வயநாடு வருகை தந்தார். அங்கு பல பகுதிகளில் ரோடு ஷோ நடத்தியும், பொதுக்கூட்டங்களில் பேசியும் வாக்குகளை சேகரித்தார். அப்போது, வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் மத்தியஅரசு பாரபட்சமாக நடந்துகொள்வதாக கடுமையாக விமர்சித்தார்.

வேட்பாளர்கள் பட்டியல்:

நவ்யா ஹரிதாஸ் (பாரதிய ஜனதா கட்சி),

பிரியங்கா காந்தி வத்ரா (இந்திய தேசிய காங்கிரஸ்),

சத்யன் மொகேரி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி),

கோபால் ஸ்வரூப் காந்தி (கிசான் மஜ்தூர் பெரோஜ்கர் சங்கக் கட்சி),

ஜெயேந்திர கர்ஷன்பாய் ரத்தோட் (ரீகால் உரிமை கட்சி),

ஷேக் ஜலீல் (நவரங் காங்கிரஸ் கட்சி),

துக்கிரலா நாகேஸ்வர ராவ் (ஜாதிய ஜன சேனா கட்சி),

ஏ. சீதா (பகுஜன் திராவிட கட்சி),

சுயேச்சை வேட்பாளர்கள் சி. அஜித்குமார், இஸ்மாயில் சபியுல்லா, ஏ. நூர் முகமது, கே. பத்மராஜன், ஆர். ராஜன், ருக்மணி, சந்தோஷ் ஜோசப், மற்றும் சோனு சிங் யாதவ்  ஆகிய 16 பேர்க ளத்தில் உள்ளனர்.