சென்னை: கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடரும், எடப்பாடி அரசின் கடைசி கூட்டத்தொடருமான, நடப்பு கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக சட்டமன்ற தேர்தலை கவனத்தில்கொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதன்படி, தற்போது கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இந்த கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிர்க்கடன் தள்ளுபடி. விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கடந்த 2016-ஆம் ஆண்டில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர் கடனை ரத்து செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.