டில்லி

பொருளாதாரக் குற்றவாளிகள் மற்றும் தலைமறைவானவர்களின் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று சர்வதேச காவல்துறை ஒத்துழைப்பு தினம் கொண்டாடப்பட்டதையொட்டி, டில்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பாக பணிபுரிந்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு காவல்துறை பதக்கம் வழங்கப்பட்டது.  இந்த பதக்கங்களை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் வழங்கினார்.

அவர் தனது உரையில்,

”இந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி முதல், ஆண்டுதோறும் சர்வதேச காவல்துறை ஒத்துழைப்பு தினம் கொண்டாட ஐ.நா. பொதுச்சபை ஒப்புதல் அளித்துள்ளது. சிறந்த விசாரணை அமைப்பாக  சிபிஐ மாறியுள்ளது . பொருளாதார குற்றவாளிகள் சட்டம் கடந்த 2018-ம் ஆண்டு அமலுக்கு வந்தது.

கடந்த 4 ஆண்டுகளில், பொருளாதார குற்றவாளிகளும், தலைமறைவு நபர்களும் வேட்டையாடப்பட்டனர்.  இதனால் 4 ஆண்டுகளில், பொருளாதார குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு நபர்களுக்குச் சொந்தமான 1.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15 ஆயிரம் கோடி) மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டப்படி, அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களிடம் கடந்த 9 ஆண்டுகளில் 12 பில்லியன் டாலர் (ரூ.98 ஆயிரத்து 400 கோடி) மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இன்டர்போல் மாநாட்டை நடத்தியது.  அதிலிருந்து தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து, இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் பிற நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. 

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 19 தலைமறைவு குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.  இதற்கு முந்தைய ஆண்டுகளில், சராசரியாக ஆண்டுக்கு 10 குற்றவாளிகள் வீதம் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டனர் .”

என்று கூறினார்.