டில்லி

விரைவில் 150 ரயில்களையும் 50 ரயில் நிலயங்களையும் தனியார் வசமாக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

நாட்டின் முதல் தனியார் ரயிலான லக்னோ – டில்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.   ஆயினும் இவ்வாறு ரயில்கள் தனியார் வசமாவதற்கு ரயில்வே ஊழியர் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  இதனால் ரயில்கள் தனியார் வசமாகாது என அரசு உறுதி அளித்துள்ளது.   அதே வேளையில் ரயில்களைத் தனியார் வசமாக்க உள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

இது குறித்து ரயில்வே வாரிய தலைவர் விகே யாதவுக்கு நிதி அயோக் முதன்மை அதிகாரி அமிதாப் காந்த் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அதில், “உலக அளவுக்கு 400 ரயில் நிலையங்களைத் தரம் உயர்த்த  ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.   இது குறித்துப் பல வருடங்களாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் இது வரை எதுவும் நடைபெறவில்லை.   ஒரு சில நிலையங்கள் மட்டும் சிறிதளவு மேம்படுத்தப்பட்டுள்ளது.

நான் இதுகுறித்து ரயில்வே அமைச்சருடன் ஒரு  விரிவான விவாதம் நடத்தி உள்ளேன். அப்போது  குறைந்த பட்சம் 50 ரயில் நிலையங்களை மேம்படுத்த முடிவு எடுக்கப்பட்டது,   தற்போது6 விமான நிலையங்கள் தனியார் வசமான பிறகு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.  இதற்காக தற்போது நிதி அயோக் தலைமை அதிகாரி, ரயில்வே வாரியத் தலைவர், மற்றும் செயலர்,  பொருளாதாரத்துறை செயலர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

ரயில்களைத் தனியார் மயமாக்க ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.  அதில் முதல் கட்டமாக 150 ரயில்கள் தனியார் வசமாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.   இந்த நடவடிக்கைகள் மூலம் 150 பயணிகள் ரயிலை இந்திய ரயில்வே இடம் இருந்து தனியாருக்கு மாற்றப்பட உள்ளது.

இந்த நடவடிக்கைகளை செய்ய இக்குழுவுக்குத் தேவையான உதவிகளை ரயில்வே துறையின் திட்ட உறுப்பினர்கள், பொறியியல் வாரிய உறுப்பினர்கள்,  ரயில்வே போக்குவரத்து வாரியம்  ஆகியோர் அளித்து ஒத்துழைக்க வேண்டும்.  இதற்குத் தேவையான உத்தரவுகளை ரயில்வே அமைச்சர் அளிக்கும் போது அதன்படி அனைவரும் நடக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.