சென்னை: மின்சார ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, நாளை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மட்டும், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தெற்கு ரயில்வேயில் சென்ட்ரல் மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகளின்சேவையை பூர்த்தி செய்யும் வகையில், நாளை, ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 3, 2024 அன்று மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் அதிக பயணிகளுக்காக ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் புளூ லைன் மற்றும் கிரீன் லைன் இரண்டிலும் வழக்கமாக மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இயங்காமல், காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமான ஞாயிறு கால அட்டவணையின்படி, காலை 05:00 முதல் 10:00 மணி வரையிலும், மாலை 08:00 முதல் 10:00 மணி வரையிலும், ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும் இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும், இந்த அட்டவணை மாற்றம் நாளை (03-03-2024)க்கு மட்டுமே பொருந்தும்.
அனைத்து பயணிகளும் தங்களின் பயணங்களை அதற்கேற்ப திட்டமிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசும், சென்னை மக்களின் வசதிக்காக கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்து உள்ளது.
சென்னையில் நாளை 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. நாளை காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை தாம்பரம் – சென்னை கடற்கரை வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.