மும்பை

 

வரும் 15 ஆம் தேதி பிபோர்ஜாய் புயல் கரையைக் கடக்க உள்ளதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. வங்கதேசம் இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும்.

பிபோர்ஜாய் புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால்  கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில்  மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறினர்.

தற்போது பிபர்ஜாய் புயல். மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இந்த புயல் தற்போது மும்பைக்கு சுமார் 600 கிலோமீட்டர் மேற்கிலும், கராச்சிக்கு தெற்கே 830 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இந்திய வானிலை ஆய்வுமையம், ”மிகக் கடுமையான சூறாவளி புயல் “பிபோர்ஜாய்” கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து ஜூன் 15 ந்தேதி பிற்பகலில் பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டிய சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளைக் கடக்கும்” என்று கூறியுள்ளது.

அதிகாரிகள் புயல் காரணமாகத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.