கொழும்பு: இலங்கையின் கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில், அந்நாட்டு ராணுவத்திற்கும், முஸ்லீம் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 6 குழந்தைகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இலங்கையின் அம்பாறை மாவட்டம், சைந்தமருது என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டில், குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் முஸ்லீம் தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாயும், அவர்களிடம் இலங்கை ராணுவத்தினர் மோதியதில், மொத்தம் 15 பேர் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த இடம், பட்டிக்கலாவோ என்ற நகரத்திற்கு தெற்கே உள்ளது. இலங்கையின் 3 தேவாலயங்கள் மற்றும் 4 நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்திய மொத்தம் 9 நபர்கள் நன்கு படித்தவர்கள் என்றும், அவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்றும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகிக்கப்படும் இல்லத்தை ராணுவத்தினர் நெருங்கியபோது, வீட்டிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாயும், ராணுவத்தினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும் கூறுகின்றனர்.