ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று மாலை சுமார் 6:40 மணிக்கு (ஆஸ்திரேலிய நேரப்படி) தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது.
இந்த சம்பவத்தில், 10 முதல் 87 வயது உடைய 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
யூதர்களின் ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளான நேற்று கடற்கரையில் நடைபெற்ற “Chanukah by the Sea” என்ற நிகழ்ச்சியை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
துப்பாக்கியுடன் வந்த இரு நபர்கள் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர், இதில் அங்கு கூடியிருந்த மக்கள் அங்குமிங்குமாக சிதறி ஓடினர்.
கடற்கரையை ஒட்டி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த இடத்திற்கும் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கும் இடையே இருந்த நடை மேம்பாலம் மீது நின்று தாக்குதல் நடத்தியதால் பலருக்கு குண்டடிபட்டது.
ஒரு தீவிரவாதி அசந்த நேரம் பார்த்து அந்த இடத்தில் பழம் விற்றுக்கொண்டிருந்த நபர் அவரை பாய்ந்து மடக்கியதில் மேலும் சில உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் விரைந்து வந்து பதில் தாக்குதல் நடத்தியதில் ஒரு தீவிரவாதி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார் மற்றொரு நபர் குண்டடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் தந்தை மகன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
1998ம் ஆண்டு மாணவர் விசாவில் ஆஸ்திரேலியா வந்த சாஜித் அக்ரம் (50) – தந்தை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆஸ்திரேலியாவில் பிறந்த அவரது மகன் நவீத் அக்ரம் (24) உயிர் மருத்துவமனையில் ஊசலாடி வருகிறது.
சாஜித் அக்ரம், துப்பாக்கி உரிமம் வைத்திருந்ததாகவும், வேட்டைக்காக பயன்படுத்தப்படும் 6 துப்பாக்கிகளை அவர்கள் இருவரும் கொண்டுவந்தாகவும் கூறப்படுகிறது.

கட்டிடத் தொழிலாளியான நவீத் அக்ரம் 2019ல் ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பில் இருந்ததாகவும் ஆனால் வன்முறை ஆபத்து இல்லை என்று மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தீவிரவாத தாக்குதல் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தாக்குதலில் 10 வயது சிறுமி ஒருவர் உட்பட பிரான்ஸ், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்றும் துப்பாக்கி எண்ணிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
[youtube-feed feed=1]