சென்னை: பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பெரியார் பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் திக. திமுக, அதிமுக கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள , அவரது சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகேவுள்ள பெரியாரின் சிலையின் கீழே வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை திமுக முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளது. , இன்று மாலை திமுக பவள விழா ஆண்டு மற்றும் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில், ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘பெரியாா்’, ‘அண்ணா’, ‘கருணாநிதி’, ‘பாவேந்தா்’, ‘பேராசிரியா்’ விருதுகளுடன் இந்தாண்டு ’மு.க. ஸ்டாலின்’ விருதும் வழங்கப்படவுள்ளது. பல ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் அமரும் வகையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக நீதியைக் காக்கவும், சாதி வேற்றுமையைக் களையவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அவரின் பிறந்த தினத்தைத் தமிழக அரசு கடந்த வாரம் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்தது.
பெரியாருக்கு முன்பே தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைகள், பெண் சுதந்திரம் போன்றவற்றை சிலர் பேசியிருந்தாலும், பெரியார் தனது பேச்சுக்கள் மூலம் இவற்றுக்கு எதிராக நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். இந்து மாதத்தில் உள்ள சாதிய படிநிலைகளை தொடர்ந்து எதிர்த்து வந்த பெரியார், சாதிய படிநிலைகளில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களை சுரண்ட பார்ப்பனியர்கள் சனாதன தர்மத்தை பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து விமர்சித்தார்.
சாதிய ஒடுக்குமுறைகள் மட்டுமல்லாது சமூகத்தில் பின்தங்கியுள்ள சாதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான இவரது போராட்டம் காரணமாகவே, இந்திய அரசியலமைப்பில் முதல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. குழந்தை திருமணத்தை கடுமையாக எதிர்த்த பெரியார் வரதட்சணை எதிர்ப்பு, விதவை மறுமணம், மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு மற்றும் பெண்களுக்கான பாலியல் சமத்துவம், பெண் கல்வி போன்றவை குறித்தும் தனது பேச்சுக்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி கற்க தடை, கோவிலில் நுழைய தடை, காலில் செருப்பு அணிய தடை போன்ற அனைத்து தடைகளையும் உடைத்தெறிய கடுமையாக போராடிய பெரியாரை, அவரது 146வது பிறந்த தினமான இன்று நினைவுகூர்வோம்.
அந்த வகையில் இன்று(17.09.2024) சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதி மொழி எடுக்கப்பட இருக்கிறது. தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.