டெல்லி: ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவது மாநில அரசுகளின் பொறுப்பு என்றும், இதுவரை 1410 ஆன்லைன் கேமிங் தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன என்று  நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

ஆன்லைன் கேமிங், பந்தயம்  தொடர்பான திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்விக்கு பதில் அளித்த ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆன்லைன் கேமிங் தடை செய்வது குறித்து மாநில அரசுகள் சட்டங்களை இயற்றலாம் என்று கூறியதுடன், மத்திய அரசின் தார்மீக அதிகாரத்தை கேள்வி கேட்க தயாநிதி மாறனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு காரணமாக ஏராளமானோர் தற்கொலை முடிவை எடுத்து வரும் நிலையில், திமுக எம்.பி. தயாநிதி மாறன் மக்களவையில்  இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இந்த  விவாதத்தின் போது,  பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “நமது நாடு கூட்டாட்சி முறையின் அடிப்படையில் செயல்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் படி, மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன”. அதன்படி, பட்டியல் 2-இல் வரும் மாநில அலுவல்கள் தொடர்பான பிரிவுகளுக்குள் சூதாட்டம் மற்றும் பந்தயம் போன்றவை அடங்குகின்றன. எனவே, அவற்றை கட்டுப்படுத்த சட்டங்களை உருவாக்குவது மாநில அரசுகளின் சட்டப்பூர்வ அதிகாரத்திற்குட்பட்டது.

ஆனால், மத்திய அரசு இவ்விஷயத்தில் அசைவின்றி இருக்கவில்லை. இதுவரை பெறப்பட்ட புகார்களின் இதுபோன்ற 1,410 விளையாட்டு தளங்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாரதிய நியாய் சன்ஹிதாவின் பிரிவு 112 ஐப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.