பாகல்பூர்
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 14 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாகப் பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும் அங்கு திருட்டுத்தனமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. இதிலும் பண்டிகை நாட்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும். பலமுறை கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
சமீபத்தில் நடந்த ஹோலி பண்டிகையின் போது கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடந்துள்ளது. அதில் மாதேபுரா மற்றும் பாகல்பூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமானோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதனால் ஹோலி கொண்டாட்டத்தின் போது பலருக்கு வாந்தி, பேதி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி அவ்வகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி இதுவரை 14 பேர் உயிர் இழந்துள்ளனர். தவிரச் சிகிச்சையில் உள்ள பலருக்குக் கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.