திருவனந்தபுரம்: நாட்டையே உலுக்கிய தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கின. கடத்தல் பின்னணியில் மிகப்பெரும் புள்ளிகள் இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவருக்கு உடந்தையாக இருந்தவர் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தூதரக முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றியவரும், இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் பெங்களூருவில் நேற்று இரவு சிக்கினார்.
அவரது நண்பர் சந்தீப் நாயர் என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரும் தமிழகம் வழியாக சாலைமார்க்கமாக என்ஐஏ அதிகாரிகள் கொச்சி அழைத்து சென்றனர். கலூர் பகுதியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் எண் 2ல் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வந்த பிறகு சிறையில் அடைக்கப்படுவார்கள்.