நீட் கேள்வித் தாள் கசிந்தது தொடர்பாக பீகார் தலைநகர் பாட்னாவில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், கேள்வி தாள் கசிவு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் நாடு முழுவதும் சுமார் 50 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு மோசடியில் ஈடுபடும் நபர்கள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடம் ரூ. 20 லட்சம் பெற்றுக்கொண்டு பாட்னா-வில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்க வைத்து அவர்களுக்கு கேள்வி தாளை முன்கூட்டியே கசியவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த விடுதியில் அவர்கள் சோதனை நடத்தினர். அதில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்டு ஏற்கனவே சிறையில் இருக்கும் சிக்கந்தர் யாதவ் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட மோசடி கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தவிர, ஏற்கனவே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் புதிதாக தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தேர்வு எழுதி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற மோசடிகள் அரங்கேறியிருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய புலனாய்வு அமைப்பிடம் நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகள் புகார் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்கள் தேர்வு முடிந்து மாலை 5:20 மணிக்குப் பிறகே கேள்வித் தாளுடன் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் அதற்க்கு முன்னதாக மாலை 4 மணிக்கே கேள்வித் தாள் ஆன்லைனில் வெளியானதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.