தோஹா:
கத்தாரில் உள்ள யுனைடெட் கிளீனிங் கம்பெனியில் பணிபுரிந்த 2 ஆயிரத்து 500 வெளிநாட்டு பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்களில் 300 பெண்கள் உள்பட ஆயிரத்து 300 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள்.
நேபாளம், பிலிபைன்ஸ், பங்களாதேஷ், இலங்கை, ஆப்ரிக்கா ஆககிய நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். கடந்த 3 மாதங்களாக அந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருந்துள்ளது.
அதோடும் வெளிநாட்டு தொழிலாளர்களின் விசாவையும் புதுப்பித்து கொடுக்கவில்லை. இதனால் பாதி க்கப்பட்டவர்கள் கத்தார் தொழிலாளர் துறையில் புகார் அளித்தனர். தங்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு நீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளனர்.
நேபாள் நாட்டை சேர்ந்தவர்கள் தூதரக உதவியை நாடியுள்ளனர். தங்களை நாடு திரும்ப நடவடிக்கை எ டுக்க வேண்டும். அல்லது அந்த நிறுவனத்தில் இருந்து ஆவணங்களை விடுவித்து வேறு நிறுவனத்தில் பணியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து தூதரக தொழிலாளர் பிரிவு அதிகாரிகள் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர். சூழ்நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிறுவன நிர்வாகிகள் பதில் அளித்துள்ளனர்.
அந்த நிறுவனம் தூய்மை பணி கான்ட்ராக்ட் எடுத்துள்ளது. அரசு துறை சார்ந்த அமைச்சகம், நீதிமன்றம், வங்கி, காவல்துறை, ராணுவம் மற்றும் பெரிய தனியார் நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் இந்த வீழ்ச்சிக்கான காரணத்தை தொழிலாளர்களிடம் தெரிவிக்க நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.
ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்கு தனித்தனி முகாம்களை அந்நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. பெண் தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாமிற்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் குளிதர்சாதன வசதி இல்லாமல் வெப்பத்தில் தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நிறுவன பிரதிநிதிகள் யாரும் இது வரை தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை. வீடு திரும்ப வைத்திருந்த பணத்தில் வெளியில் உணவு வாங்கி சாப்பிடும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பணம் இல்லாதவர்கள் நண்பர்கள், உறவினர்களின் உதவியை நாடி வருகின்றனர். இது தொடர்பாக விள க்கம் அளிக்க தொழிலாளர் துறை கேட்டுக் கொண்டபோதும், நிறுவனத்தின் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் வெளிவராத நிலை உள்ளது.