மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டு காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் வியாபாரிகள் 13 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே பதவிக்கு வந்தது முதல் போதைப்பொருள் ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த 20 மாதங்களில் காவல்துறையினரின் போதை ஒழிப்பு நடவடிக்கையின்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம்  புலகான் மாகாணத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது போதைப்பொருள் வியாபாரிகள்  காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காவல்துறையினரும்  துப்பாக்கிச்சூடு நடத்தி பதிலடி தந்தனர். இதில் போதைப்பொருள் வியாபாரிகள் 13 பேர்,  பலியாகினர்.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 19 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.  250 பாக்கெட் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் புலகான் மாகாணத்தில் ஒரே நாளில் நடந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்போது 32 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது  குறிப்பிடத்தக்கது.