சென்னை: வாக்குப்பதிவு நாளன்று சென்னையில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க 12 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக, மாநகர தேர்தல் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான பிரகாஷ், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சென்னையில், இதுவரை 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு கோவி ஷீல்டு தடுப்பூசியும், மீதமுள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், இதை 50 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தவர் அரசு, தனியார் மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அம்மா சிறு மருத்துவமனைகள் என சென்னையில் 411 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் தடுப்பூசி முகாம்களை அதிகரிப்பதன் மூலம் இந்த மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறியவர், கோயம்பேடு சந்தையில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது போல், சென்னையில் உள்ள அனைத்து சந்தைகள், வணிக வளாகங்களில் விரைவில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் என்றார்.
மேலும், சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் மீண்டும் தெரு வாரியாக பணியாளர்கள் மீண்டும் பணி அமர்த்தப்பட்டு இருப்பதாகவும், மருத்துவப் பரிசோதனை முகாம்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
சென்னையில் தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி நேற்று தொடங்கப்பட்டு உள்ளது. இது வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்கப்படும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி ஒன்றுக்கு 15 எண்ணிக்கையிலான முழு உடல் கவச உடைகள், முகக்கவசங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்படும். இதை கண்காணிக்கவும், தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையிலும் வாக்குச்சாவடிக்கு இருவர் என மொத்தம் 12 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.