சென்னை
இன்று முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
கடந்த 16ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது தெரிந்ததே. இந்த தேர்வு முடிவுகள் மாணவர்கள் பள்ளியில் பதிந்துள்ள மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன் ஒவ்வொரு பள்ளியிலும் இந்த முடிவுகள் அறிவிப்புப் பலகையின் மூலம் தெரிவிக்கப்பட்டன. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு கல்லுரிகளில் சேர உதவியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. இது குறித்து ”இன்று முதல் மாணவர்கள் இந்த சான்றிதழ்களை தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும் தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
அவ்வாறு பள்ளிகோ அல்லது தேர்வு மையத்துக்கோ செல்ல இயலவில்லை எனில் இன்று பிறபகல் முதல் பள்ளி மாணவர்களும் தனித் தேர்வர்களும் அரசு தேர்வுத் துறையின் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்ய தேர்வு பதிவு எண்ணுடன் பிறந்த தேதியையும் குறிப்பிட வேண்டும்” என தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.