திருவனந்தபுரம்

கேரள அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான 128 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தற்போது கேரள மாநிலச் சட்டசபைத் தொடர் நடந்து வருகிறது.  இதில் புரட்சி மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் ரமா நேற்று ஒரு கேள்வி எழுப்பி உள்ளார்.  அந்தக் கேள்வியில் அவர் கடந்த 5 வருடங்களில் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளில் திரும்பப்பெறப்பட்டுள்ள வழக்குகள் எத்தனை எனக் கேட்டார்.

முதல்வர் பின்ராயி விஜயன் அளித்த பதிலில், “கேரளாவில் கடந்த 5 வருடங்களில் அமைச்சர்கள், சட்டப்பேரவை  உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 128 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. இவற்றில் அமைச்சர்களுக்கு எதிராக 24 வழக்குகளும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக 104 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் கடந்த 2007ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் இடது சாரி கூட்டணிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 848 வழக்குகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகப் பதிவு ெசய்யப்பட்ட 55 வழக்குகளும், பாஜவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 15 வழக்குகளும், எஸ்டிபிஐக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளும், பிடிபி கட்சிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள 2 வழக்குகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளும், உயர்கல்வி துறை அமைச்சர் பிந்துவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளும், எனக்கு (முதல்வர்) எதிராகப் பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.